×

உலக நாடுகளை விஞ்சியது இந்தியா 10 நாளில் 31 லட்சம் பாதிப்பு: பலி எண்ணிக்கை 100% அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 10 நாட்களில் மட்டுமே  கொரோனா தொற்றினால் 31 லட்சத்து 8 ஆயிரத்து 698 பேர் பாதித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்குதல், நிபுணர்களின் கணிப்புகளை பொய்யாக்கி இருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு 3 லட்சங்களையும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளிக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் உள்ளது. ஆனால், ஏராளமான நோயாளிகள் வீடுகளிலேயே இறக்கின்றனர். இவை இந்த அதிகாரப்பூர்வ கணக்கில் வரவில்லை. மயானங்களில் எரிக்கப்படும், புதைக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கைக்கும், அரசு கூறும் இந்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.  

இந்நிலையில், நாட்டில் கடந்த 18ம் தேதி முதல் நேற்றுடன் முடிந்த கடந்த 10 நாட்களில் மட்டுமே 31 லட்சத்து 8 ஆயிரத்து 698 பேர் தொற்றினால் பாதித்து இருக்கின்றனர். உலகளவில் வேறு எந்த நாட்டிலும் இந்தளவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது கிடையாது. அதேபோல், இதே காலத்தில் 22 ஆயிரத்து 245 பேர் இறந்துள்ளனர். கடந்த 18ம் தேதிக்கு முந்தைய 10 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரம் வரையில் இருந்தது. இது நேற்றைய நிலவரப்படி 100 சதவீதம் அதிகமாகி உள்ளது. அதேபோல், பாதிப்பு எண்ணிக்கையும் 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஐஐடி.கள் கடந்த மாதம் கணித்த பாதிப்பு, பலி எண்ணிக்கையை விட இவை மிகவும் அதிகம். அதனால், நேற்று முன்தினம் இந்த கணிப்பை ஐஐடி நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அடுத்த மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்கும் என்று அவை கூறியுள்ளன.அன்றைய நிலையில் நாட்டில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கையும் 40 லட்சத்தை நெருங்கும் என்றும் கூறியுள்ளன.

* நேத்து கொஞ்சம் பரவாயில்லை...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியும் நேற்று முன்தினத்தை விட நேற்று குறைந்திருப்பது ஆறுதல் அளித்துள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பலி பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு
* நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 23,144 பேர் தொற்றினால் பாதித்துள்ளனர். இதன் மூலம், பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 36,307ஆனது.
* தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,771 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1 லட்சத்து 97, 894 ஆக அதிகரித்துள்ளது.
* நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 23,144 பேர் தொற்றினால் பாதித்துள்ளனர். இதன் மூலம், பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 36,307ஆனது.
* தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்து 56,209 ஆக உள்ளது.
* நேற்று முன்தினம் நாட்டின் ஒருநாள் பாதிப்பு 3.52 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 2812 ஆகவும் இருந்தது. நேற்று முன்தினத்துக்கும், நேற்றைய பாதிப்புக்கும் ஒப்பிடுகையில் 29 ஆயிரத்து 847 வரை குறைந்துள்ளது. அதேபோல், பலி எண்ணிக்கையும் 41 வரை குறைந்துள்ளது.

Tags : India , India surpasses world powers by 31 lakh in 10 days: 100% increase in casualties
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!