இயற்கையான முறையில் காய்கறி சாகுபடி செய்தால் ஊக்கத்தொகை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், செப்.29:  திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தோட்டக்கலை துறையின் மூலமாக இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.  இதில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக எக்டருக்கு ரூ.4000 வழங்கப்படுகிறது.  மேலும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.2,500 மற்றும் காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகளுக்கு எக்டருக்கு ரூ.3,750 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.  இதுதவிர அங்கக சான்று பெற ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது.  அதிகபட்சமாக 2 எக்டர் வரை ஒரு விவசாயிக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனியாகவும் அல்லது விவசாய குழுக்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.  இத்திட்டத்தில் ஊக்கத் தொகை பெற சம்மந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.  இதன் மூலம் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறுவதுடன் நல்ல முறையில் லாபம் ஈட்ட முடியும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்த பரப்பு விபரங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் ஆகிய சிட்டா, அடங்கல் மற்றும் வயல் புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உழவன் செயலி மற்றும் www.tn.hortinet.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: