வீட்டை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் ரேஷன் கார்டை ஒப்படைத்து போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திண்டுக்கல், செப்.29: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைத்து மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் தாலுகா சொக்கலிங்கபுரத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் போஸ், மொக்கமாயன், மாயாக்காள் குடும்பத்தினர் கடந்த 4  தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது வீட்டை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து போஸ், மொக்கமாயன், மாயக்காள் குடும்பத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள்  அவர்களை சமாதானம் செய்து, இதுதொடர்பாக கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளிக்குமாறு தெரிவித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மூன்று பேரும்  தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் தென்னதோப்பிற்கு செல்வதற்கு பாதை வேண்டும்  என்பதற்காக எங்களுக்கு பல விதத்தில் தொல்லை கொடுத்து வருகிறார். இது  தொடர்பாக ஆத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நித்தியானந்தத்தின் தூண்டுதலின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வீட்டை காலி பண்ண வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கியுள்ளனர். எங்களை அதிகாரிகள் மிரட்டுகின்றனர். நித்தியானந்தாவின் மீதும், மிரட்டும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories: