திருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகளில் பார்களில் மது விற்பனை அமோகம்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

திருவள்ளூர், மார்ச் 20: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் 31ம் தேதி  வரை டாஸ்மாக் பார்களை மூட அரசு உத்தரவிட்டும், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், டாஸ்மாக் கடை அருகே உள்ள பார்களில் முழு நேரமும் ‘சரக்கு’ விற்பனை அமோகமாக நடக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் வருமானம் கருதி வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் வரும் 31ம் தேதி வரையில் டாஸ்மாக் மதுபான பார்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் காலை நேரத்திலேயே போதையில் மிதக்கும் ஆசாமிகள், ‘சரக்கு’ தேடி அலைகின்றனர். இதை பயன்படுத்தி, டாஸ்மாக் கடை அருகே ‘பார்’ ஊழியர்கள் கடை மூடியிருக்கும் நேரத்தில் மதுவிற்பனையை துவங்குகின்றனர். தேவைகேற்ப மது வகைகளை பெட்டியுடன், ‘பார்’களில் பதுக்கி வைத்து, இரு மடங்கு விலையில் விற்பனை செய்கின்றனர். கடை மூடியிருக்கும் நேரத்தில், பார்களில் அதிக விலைக்கு சரக்கு வாங்குவோருக்கு டம்ளர், தண்ணீர் இலவசமாக வழங்குகின்றனர்.

இதனால் குடிப்போரின் பாக்கெட் காலியாகிறது. பார்களை நடத்தும் பிரமுகர்களுக்கு லாபம் கொட்டுகிறது. இதற்காக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் மற்றும் உள்ளூர் போலீசாருக்கும், பார் நடத்துவோர் ‘கப்பம்’ கட்டுகின்றனர்.

ஒவ்வொரு ‘பார்’ சார்பிலும், மாதத்துக்கு இரண்டு வழக்குக்கு ஆட்களும், தேவைப்படும்போது சரக்கும் கொடுக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதிமுறையை போலீசார் கடைபிடிக்கின்றனர். இதனால் டாஸ்மாக் கடைகள் அருகிலுள்ள அனைத்து பார்களிலும், எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் மது விற்பனை அமோகமாக நடக்கிறது. எனவே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதை தடுக்க, மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுத்து, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அல்லது, மது விற்பனை செய்து, தொடர்ச்சியாக சிக்குபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: