நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் ஓடும் கார் தீப்பிடித்து நாசம்: கம்பெனி உரிமையாளர் தப்பினார்

ஆவடி, மார்ச் 20: வண்டலூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், காரை ஓட்டிச் சென்ற கம்பெனி உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேடவாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அபி நரசிம்மன் (54). இவர், ஆவடி அடுத்த பட்டாபிராம் ஐ.ஏ.எப் சாலையில் சினிமா துறை சம்பந்தப்பட்ட நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அபி நரசிம்மன் வீட்டில் இருந்து காரில் தனது அலுவலகத்துக்கு புறப்பட்டார். அவரே காரை ஓட்டிக்கொண்டு வந்தார்.

வண்டலூர்- நெமிலிச்சேரி வெளி வட்ட சாலையில், பட்டாபிராம் அருகே ராமாபுரம் பகுதியில் சென்றபோது காரின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனால், அபி நரசிம்மன் காரை நிறுத்திவிட்டு அவசரமாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், பூந்தமல்லியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்து பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஓடும் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: