கோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு

ஸ்பிக்நகர், மார்ச் 20: கோடை போல் வெயில் கொளுத்தி வருவதாலும், கொரோனா வைரஸ் தடுப்புக்கு பயன்படுவதாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் எலுமிச்சை பழத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னரே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை போல் வெயில் கொளுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. பொதுவாக வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட குளிர்ச்சியை ஏற்படுத்தும் பானங்களில்  எலுமிச்சை சாறு முதன்மையாகத் திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரையில் உள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி மதுரை,  திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் எலுமிச்சை பழம்  விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதனால் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் வரை உச்சத்தில் இருந்த எலுமிச்சை விலை கடந்த  இரு மாதங்களுக்கு முன்னர் திடீரென சரிந்தது. கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை  விற்பனையானது. ஆனால், தற்போது கோடை போல் வெயில் கொளுத்தி வருவதோடு  எலுமிச்சையின்  தேவை அதிகரித்துவிட்டதால் அதன் விலையில் தற்போது உயர்வு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட எலுமிச்சை பழச்சாறு பயன்படுவதால் அதன் விலை தற்போது கிலோ  ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் எலுமிச்சை சாகுபடிக்கு என தனியாக தோட்டங்கள் உள்ளன. இத்தகைய விவசாய தோட்டங்களில் குறிப்பிட்ட அளவுக்கு பறிக்கப்படும் எலுமிச்சைகள் மாவட்டத்தின் தேவைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை.  இதன் காரணமாகவே வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் எலுமிச்சை வரவழைக்கப்பட்டு விற்பனை  செய்யப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முன்னர் ரூ.2க்கு விற்ற ஒரு எலுமிச்சை பழம் தற்போது தரத்தை பொருத்து ரூ.5 முதல் ரூ.7 என விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் நாட்கள் செல்ல செல்ல கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வேளையில் எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: