பிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை

நெல்லை, மார்ச் 20: தற்போது நடைபெறும் பிளஸ்2 ெபாதுத்தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் மனோகரன், நெல்லை மாவட்ட தலைவர் தளவாய், செயலாளர் ஆசிரியர் சார்லஸ் நீல் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:தமிழக அரசின் கல்வித்துறையில் நடைபெறும் மேல்நிலை வகுப்புகளுக்கான (பிளஸ்1, பிளஸ்2) பொதுத் தேர்வுகளின் போது பறக்கும் படை உறுப்பினர்கள் ஆய்வு செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என கண்டறிந்து அம்முறையை மாற்றி தேர்வு நேரம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கான நிலைப்படை உருவாக்க வேண்டும்.

10 அறைகளுக்கு குறைந்தபட்சம் ஒருவர் என்ற முறையில் நியமிக்கப்படும் நிலைப்படையினர் தாங்கள் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்ட தேர்வு மையத்திலேயே இருந்து ஆய்வுப்பணியில் ஈடபட வேண்டும் என விதிமுறையை தேர்வுத்துறை வகுத்துள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் தற்போது நடைபெறும் இந்த பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளில் நிலையான ஆய்வுப்படைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் மாவட்ட பள்ளி கல்வித்துறை செயல்பட்டு வருவது முதுகலை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் 33 மையங்களில் நடைபெறும் தேர்வுக்கு சுமார் 75 நிலைப்படை உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் 46 உறுப்பினர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களிலும் மற்றும் பிரச்னைக்கு உரிய தேர்வு மையங்களிலும் போதுமான எண்ணிக்கையில் நிலைப்படை உறுப்பினர்கள் பணியமர்த்தப்படாமல் இருப்பது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த பல வருடங்களாக குழு தலைவர் மூலம் பணிஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் மன நிறைவோடு பணியாற்றும் வண்ணம் செயல்படுத்தி வந்த திட்டம் இந்த ஆண்டு நெல்லை கல்வி மாவட்டத்தில் மட்டும் மாற்றப்பட்டதற்கான காரணம் மர்மமாக உள்ளது. ஏற்கனவே வினாத்தாள் கட்டு காப்பாளர், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் பணி நியமனங்கள் பணி மூப்பு அடிப்படையில் செய்யப்படாமல் பல குளறுபடிகளோடு நடந்து வரும் நிலையில் நிலைப்படை ஆய்வுப்பணியிலும் சீரற்ற முறை பின்பற்றப்படுவது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கலாம்.எனவே, இனி நடைபெற உள்ள தேர்வுகளிலும் வருங்காலங்களிலும் தேர்வுப்பணி நியமனங்களும், செய்பாடுகளும் தேர்வுத்துறையின் விதிமுறைகளுக்குட்பட்டு சீரான முறையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு  அவர்கள் ெதரிவித்துள்ளனர்.

Related Stories: