மருத்துவ படிப்பு படிக்க சென்று பிலிப்பைன்சில் தவிக்கும் பொன்னமராவதி மாணவர் இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர் வலியுறுத்தல்

பொன்னமராவதி, மார்ச் 20: பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வரும் பொன்னமராவதி மாணவரை மீட்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

பொன்னமராவதியை சேர்ந்தவர் ஆசிரியர் வெங்கட்ராமன். இவரது மகன் மோனிஷ்கரன்(21) பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கொரோனோ அச்சுறுத்தலின் காரணமாக இவரையும், இவருடன் படிக்கும் 400 இந்திய மாணவர்களையும் மீட்கவேண்டும் என்று மோனிஷ்கரனின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து மாணவர் மோனிஷ்கரன் மணிலாவில் இருந்து செல்போனில் தெரிவித்ததாவது: கொரோனோ பரவிவரும் நிலையில் இங்கு சூழ்நிலை சரியில்லை. மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்க், சானிடைசர் போதிய அளவு கிடைக்கவில்லை. எனவே இங்கு படிக்கும் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் 14ம் தேதி இந்தியா புறப்பட தயாராக இருந்தோம். ஆனால் விமான நிலையத்தில் எங்களை அனுமதிக்கவில்லை. தினமும் விமான நிலையம் செல்கிறோம். ஆனால் இந்தியா செல்ல இந்திய அரசு உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என கூறி மறுத்து வருகிறார்கள். எங்களை இந்தியா அழைத்து வந்தால் தேவையான மருத்துவ பரிசோதனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எங்களை இந்தியா அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: