கொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்

திருச்சி, மார்ச் 20: கொரோனா அபாயத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பள்ளிகளில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க விடுமுறை அளித்த நிலையில், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகளை வழங்கியதால் சமூகநலத்துறை சர்ச்சையில் சிக்கி உள்ளது. தமிழகத்தில் கொரா னா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் மட்டும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளோடு நடந்து வருகிறது. அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு 31ம் தேதி வரையிலான உணவுப் பொருட்களை அந்த மையப் பணியாளர்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆனால், பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 3வது வாரத்துக்கான முட்டைகள் அந்தந்த மையங்களுக்கு வந்துள்ளது. இவை அப்படியே வைக்கப்பட்டிருந்தால் கெட்டுப் போய்விடும் என்பதால், 20ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு வழங்க வேண்டிய முட்டைகளை மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வழங்க சமூகநலத்துறை ஆணையர் ஆபிரகாம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஒவ்வொரு மாணவரிடமும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான நாட்களுக்கு 5 முட்டைகளை வழங்கி அவர்களிடமோ பெற்றோரிடமோ கையெழுத்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருச்சியிலுள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டு முட்டைகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் பெற்றோர் வந்து வாங்கிச் சென்றனர். இதனால் விடுமுறை நாளான நேற்று முன்தினம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள குழந்தைகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சில பள்ளிகளில் சீருடையிலேயே மாணவர்கள் வந்து முட்டைகளை பெற்றுச் சென்றனர். சில பள்ளிகளில் மட்டும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கினர். பள்ளிகளில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்கத்தான் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் உத்தரவை மீறி சமூகநலத்துறை ஆணையர் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து முட்டைகள் வழங்க உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: