வாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியுமான கோவில்பட்டி சாலை

சாத்தூர், மார்ச் 20: ஏழாயிரம் பண்ணை-கோவில்பட்டி சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை மற்றும் அதை சுற்றியுள்ள இ.எல். ரெட்டியாபட்டி, முத்தாண்டியாபுரம், சாமி தேவன்பட்டி, ஊத்துப்பட்டி, மடத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஏழாயிரம்பண்ணை-கோவில்பட்டி செல்லும் சாலையை பயன்படுத்துகின்றனர்.

மேலும் இப்பகுதியை சேர்ந்தவர்கள், நகரத்திற்கு செல்ல வேண்டுமென்றால், கோவில்பட்டிக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். அதிக வாகனப் போக்குவரத்து மிக்க இந்த சாலை, தற்போது கற்கள் பெயர்ந்தும், பள்ளம், மேடாகக் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பெயரளவில் மட்டுமே சாலை சீரமைப்புப் பணி நடப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: