குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

கம்பம் மார்ச் 20: கம்பத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கம்பத்தில் உள்ள சாஹீன் பாக் திடலில், கடந்த மாதம் 29ம் தேதி இஸ்லாமிய பெண்கள் தொடர் போராட்டம் தொடங்கினர். இந்நிலையில், கொரோனா பரவலை இந்திய அரசு பேரிடராக அறிவித்துள்ளது. இதனால், தேச நலன் கருதி மார்ச் 31ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த துடிக்கிறது. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. கம்பத்தில் 21 நாட்களாக 450 மணி நேரம் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. எனவே, தேசத்தின் நலன் கருதி, கொரோன வைரஸ் தாக்குதல் எதிரொலியாக அரசு வேண்டுகோளை ஏற்று மார்ச் 31ம் தேதி வரை எங்களது போராட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.

ஏப்.1ம் தேதி முதல் என்.பி.ஆர் கணக்கெடுப்பை துவங்கினால் மீண்டும் போராட்டக்களத்தில் இறங்குவோம். இடைப்பட்ட 13 நாட்களில் வெவ்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபடுவோம். மத்திய அரசு இந்த கருப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’ என்றனர்.

Related Stories: