ஆண்டிபட்டி அருகே வாறுகால் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்

ஆண்டிபட்டி, மார்ச் 20: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் வாறுகால் பணிக்காக நடக்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவிக்கின்றனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் டி.சுப்புலாபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் சுமார் 500 மீ தூரத்திற்கு சாலையோரம் வாறுகால் அமைக்க முடிவு செய்தனர். இதற்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. மேலும், சாலையோரம் பள்ளம் தோண்டினர். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றியதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டியதாக கிராம மக்கள் குற்றம் சாற்றினர்.

முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, சில தினங்களுக்கு முன்பு கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது வந்த ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகர், பிடிஓ ஆண்டாள் ஆகியோர், முறையாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தனர். ஆனால், இதுவரை முறையாக ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என தெரிவித்தனர். நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்து குறியிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, டி.சுப்புலாபுரம் கிராமத்தில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வடிகால் கட்டுவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: