கொரோனா தொற்றை தடுக்க தமிழக எல்லையில் 24 மணி நேரமும் சோதனை

கம்பம், மார்ச் 20: கொரோனா தொற்று எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் உள்ள மருத்துவமுகாம்களில் தமிழக போலீஸ், சுகாதாரத்துறையினர் 24 நான்கு மணி நேர சோதனையை தொடங்கி உள்ளனர். கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழகப்பகுதிக்குள் இந்த தொற்று பரவாமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவில், கம்பம் அடிவாரம், போடிமெட்டு, லோயர்கேம்ப் பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், பறவைக் காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டு வாகனங்களில் வருபவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இம்மாத இறுதி வரை தமிழகத் தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்லவேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகல் என 24 மணி நேரமும் இந்த மருத்துவ முகாம்களில் சுழற்சி முறையில் சுகாதாரத்துறையினர் குழுக்களாக சோதனை நடத்தி வருகின்றனர். முகாமில் உள்ளவர்கள் பஸ் மற்றும் கார் பயணிகளிடம் கொரோனா வைரஸ் குறித்தும் பாதுகாப்பு முறைகள் குறித்தும், கை கழுவும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில், கம்பம் மெட்டு இருமாநில எல்லைப்பகுதியில் உள்ள தமிழக, கேரள போலீசார்கள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கம்பம்மெட்டு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை தமிழக போலீசாரும், அதுபோல் கேரளப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்களை கேரள போலீசார் மற்றும் கேரள சுகாதாரத்துறையினரும் சோதனை செய்து வருகின்றனர்.

எச்சரிக்கை மீறி கேரளா செல்லும் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத் தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அதுபோல் தொழிலாளர்களை ஜீப்பில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்று போலீசார் ஜீப் டிரைவர்களிடமும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மேலும் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அதேநேரம் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையும் மீறி, கம்பத்தில் இருந்து பஸ்களிலும், பைக்குகளிலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இடுக்கி மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பதால், இது தமிழகத்தில் இருந்து செல்லும் ஒருவரை பாதித்தால், தேனிமாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஜீப்புகளில் தொழிலாளர்கள் செல்வதை நிறுத்தி விட்டோம், ஆனால் பஸ்களிலும், பைக்குகளிலும் செல்பவர்களை எப்படி நிறுத்துவது, அதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: