குப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...

காரைக்குடி, மார்ச் 20: காரைக்குடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வார்டிலும் 20க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது. தினமும் குப்பைகளை வீடு வீடாக சென்று நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வண்டிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக சேகரித்து, பின்னர் அதை ஒவ்வொரு வீதிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் பெரிய குப்பை தொட்டிகளில் சேகரித்து, லாரிகள் மூலம் காரைக்குடி ரஸ்தா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கம்.

தினந்தோறும் டன் கணக்கில் சேரும் குப்பைகளை அகற்றி வந்த நிலையில் தற்போது வாரம் ஒரு முறை மட்டுமே எடுக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். காரைக்குடி டிடி நகரில் தெருவோரம் குப்பைகள் மலை போல் குவிந்து காட்சியளிக்கிறது. மேலும் இந்த குப்பைகளால் துர் நாற்றம் வீசுவதோடு நாய், மாடுகள் அனைத்தும் அங்கேயே நின்று கொண்டு தெருவில் செல்வோர்களை தொந்தரவு செய்கிறது. காரைக்குடியில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களில் குப்பை லாரிகள் வரவில்லை என ஏரியா வாசிகள் தெரிவித்தனர்.

Related Stories: