கொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு

மதுரை, மார்ச் 20: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆட்டோக்கள், தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், தனியார் பஸ் உரிமையாளர்கள், ரோட்டரி கிளப் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை கலெக்டர் வினய் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாநகராட்சி துணை ஆணையர் நாகஜோதி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ், உணவுபாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுனர் சங்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் தனியார் நிறுவன நிர்வாக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் வினய் பேசியதாவது: இந்த வைரஸ் தடுக்க ஆட்டோ ஒட்டுனர்கள் ஒவ்வொரு டிரிப் முடிந்தவுடன் 50 கிராம் பிளிச்சிங் பவுடருடன், ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து பயணிகள் உட்கார்ந்த சீட், கைபிடிகள் ஆகியவற்றை துடைக்க வேண்டும். இது சேவையாக கருதுவதுடன் உங்களையும் கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கும். தனியார் பஸ்களில் ஒரு டிரிப் முடிந்தவுடன் இதே போன்று பிளிச்சிங் பவுடருடன் தண்ணீர் கலந்து பஸ் முழுவதும் கிருமி நாசினி அடிக்க வேண்டும்.

தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் அடுத்த சுழற்சிக்கு ஊழியர்கள் வந்தால், அதற்கு முன்பாக அந்த ஊழியர்கள் பயன்படுத்திய மிஷின் ஆகியவற்றை கிருமிநாசி கொண்டு துடைக்க வேண்டும். ஊழியர்கள் சோப்பு போட்டு அடிக்கடி கை கழுவ வேண்டும். ஒரு நிமிடமாவது சோப்பு தண்ணீர் கையில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இந்த நோயின் தாக்கம் குறித்து, ரோட்டரி கிளப் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: