திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திண்டுக்கல், மார்ச் 20: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை கலெக்டர் விஜயலட்சுமி, திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளுக்கு 31.3.2020 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள பஸ்களில் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளித்து, பொதுமக்கள் கைகள் படும் இடங்களை சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள், தனியார் பஸ்கள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள் மற்றும் பள்ளி வாகனங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைகளை முறையாகவும், சுத்தமாகவும் கழுவும் விதம் குறித்து பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்து துறை அலுவலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு கிருமி பரவுவதை தடுக்கும் வகையில் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திண்டுக்கல் கோட்டத்தில் 881 பஸ்கள் உள்ளன.  இதில் 800 பஸ்கள் தினமும் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன். திண்டுக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 470 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் கொரோனா வைரஸ் நோய் கிருமிகள் அண்டை மாநிலங்களில் இருந்து பரவுவதை தடுக்கும் வகையில் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துப் பணிமனைகள் 8 இடங்களில் உள்ளன. இங்கு 3,200க்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். அனைத்து பணிமனைகளிலும் கிருமிநாசினி மருந்து தெளித்து கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பணியாளர்களிடையேயும் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மார்க்கெட் பகுதிகளில் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களிடம் கொரானோ தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும்போதும், அவ்வப்போதும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும், மருத்துவர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சியை அனைவரும் மேற்கொண்டால்தான் கொரோனா பரவாமல் முழுமையாக தடுக்க இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

ஆய்வின்போது, போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் கணேசன், நகர்நல அலுவலர் அனிதா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: