பெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை

அயோத்தியாப்பட்டணம், மார்ச் 20:  போக்குவரத்து வசதியில்லாத பெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணி தொடங்கவுள்ளது. 30 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு கிடைத்ததால், 3 மலை கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆலடிப்பட்டி ஊராட்சி பெலாப்பாடி மலைப்பகுதியில் பெலாப்பாடி, வாலூத்து, தாழூர் ஆகிய 3 மலை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு சாலை, போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. அடிப்படை வசதிகளை கேட்டு, இப்பகுதி மக்கள்  30 ஆண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்களே ஒன்றிணைந்து மலையை குடைந்து பாதை அமைத்தனர். மக்களின் தொடர் போராட்டத்தின்  பலனாக, 3 ஆண்டுக்கு முன் இந்த மலை கிராமங்களுக்கு, வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில் இருந்து மின்கம்பங்கள் அமைத்து மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, புழுதிக்குட்டையில் இருந்து பெலாப்பாடி மலை கிராமங்களுக்கு செல்ல  வனப்பகுதியில் 3 கி. மீ., துாரத்திற்கு மக்களே அமைத்த மலைப்பாதையை சீரமைத்து, தமிழக அரசு வனத்துறையின் திருச்சி  பொறியியல் பிரிவு வாயிலாக, 3.75 மீட்டர் அகலத்தில், 2.90 கி. மீ., துாரத்திற்கு 1.58 கோடி செலவில் 3 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. கிராம மக்களின் வருவாய்மத்துறை பட்டா நிலத்தில் 4 கி.மீ., துாரத்திற்கு கிராம மக்கள் அமைத்துள்ள கரடு முரடான மலைப்பாதை தார்சாலையாக தரம் உயர்த்தப்படவில்லை. இதனால், சாலை போக்குவரத்து முழுமை பெறாததால், வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை நீடித்து வந்தது. மலைப்பாதையில் ‘பிக்கப்’ சரக்கு வாகனங்களில் உயிரை பணயம் வைத்து பழங்குடியின மக்கள் பயணித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, மழைக்காலங்களில் மலைப்பாதையில் மண் சரிந்து, போக்குவரத்துக்கு துண்டிக்கப்படுவதால் 3 மலை கிராம மக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 6.62 கோடியில் 4 கி.மீ., துாரத்திற்கு தார்சலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து மத்திய அரசுக்கு சமர்பித்துள்ளனர். மத்திய அரசிடம் இருந்து  நிதி ஒதுக்கீடு கிடைத்ததும்  தார்சாலை அமைக்கும் திட்டம்  செயல்படுத்தப்படும் என்பதால், 30 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு பெற்றுள்ள 3 மலை கிராமங்களை சேர்ந்த  மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: