வரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது

சேலம், மார்ச் 20: கொரோனா வைரஸ் பீதியால் கடந்த ஒன்றரை வாரத்தில் வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது என்று வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர். இந்திய அளவில் சேலத்தில் வெள்ளிபொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு வெள்ளி அரைஞாண்கொடி, கால்கொலுசு, வெள்ளித்தட்டு, டம்ளர், குடம், குங்குமம் சிமிழ் உள்பட பல்வேறு விதமான பொருட்கள் உற்பத்தியாகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி பொருட்கள் வட மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த பொங்கல் பண்டிகையில் இருந்தே வெள்ளி ஒரு கிலோ 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் என விலையில் மாற்றம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை வாரமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பீதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், நகை கடைகள், சில்வர் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் மூடப்பட்டுள்ளன.  வெள்ளி தொழிலை நம்பி சேலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் பீதியால் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒன்றரை வாரத்தில் வெள்ளியின் விலை மளமளவென சரிந்துள்ளது என்று வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த 1ம் தேதியில் ஒரு கிலோ வெள்ளி 48 ஆயிரத்திற்கு விற்றது. கடந்த வாரத்தில் இருந்து கொரோனா வைரஸ் பீதியால் கடந்த 13ம் தேதி கிலோவுக்கு 6 ஆயிரம் சரிந்து, 42 ஆயிரத்திற்கு விற்றது. இந்நிலையில் மீண்டும் விலை சரிந்து, நேற்று நிலவரப்படி கிலோ 36 ஆயிரத்து 500க்கு விற்றது. கடந்த ஒன்றரை வாரத்தில் கிலோவுக்கு 11,500 குறைந்துள்ளது.

வெள்ளி வரலாற்றிலேயே ஒன்றரை வாரத்தில் இந்த அளவுக்கு விலை குறைந்ததும் இல்லை, ஏறியதும் இல்லை. இதே நிலை நீடித்தால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு விற்ற ஒரு கிலோ வெள்ளி 20 ஆயிரம் முதல் 22 ஆயிரத்திற்கு சரிய வாய்ப்புள்ளது. வெள்ளிப்பொருட்களின் உற்பத்தி குறைந்ததால், இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வியாபாரம் சரிந்துள்ளதால் வியாபாரிகளுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: