கொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை

சேலம், மார்ச் 20: கொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படுகிறது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டும், தீர்ப்பு வழங்கப்பட்டும் வருகிறது. ஏராளமான கைதிகள் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர் படுத்தப்படுகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் கூடாத வகையில் பார்த்துக்ெகாள்ள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி முக்கிய வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. வழக்கறிஞர்கள் இருதரப்பிலும் விசாரணைக்கு தயாராக இருக்கும் பட்சத்தில் அந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்படுகிறது. சாதாரண வழக்குகள் விசாரணை 3 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜாமீன், முன்ஜாமீன் வழக்குகள் தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறையில் இருந்து கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது நிறுத்தப்பட்டு, வீடியோகான்பரன்சிங் மூலம் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

இதுகுறித்து நீதிமன்ற அதிகாரிகள் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி தமிழகம் முழுவதுமுள்ள நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. மற்ற வழக்குகள் அனைத்தும் அடுத்தமாதம் 8ம்தேதிவரை தள்ளிவைக்கப்படுகிறது’ என்றனர்.

Related Stories: