சளி, இருமல் உள்ளவர்கள் மட்டுமே ‘மாஸ்க்’ அணிய வேண்டும்

சேலம், மார்ச் 20:  சளி, இருமல் உள்ளவர்கள் மட்டுமே முக கவசங்களை (மாஸ்க்) அணிய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்தார்.  அப்போது அவர்  பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் நோய் தாக்கம் எதுவும் இல்லை.

கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்களது கைகளை சுத்தமாக கழுவுவதற்கு அலுவலக முகப்பு வாயில் அருகில் தண்ணீர் வசதியுடன் பிரத்தியோகமாக கை கழுவும் பேசன் அமைக்கப்பட்டு, சோப்பும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் அலுவலகப் பணிக்கு வரும்போதே தங்களது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவிவிட்டு அலுவலகத்திற்கு செல்லலாம். கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும்.இந்நோய் அறிகுறிகள் உள்ள நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது. மேலும், இருமல் மற்றும் தும்பல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போதும் கைகள் மூலமாகவும் பரவுகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கையாக தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு, கைகளைநன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.  நோய் தொற்றோ அல்லது சளி, இருமல்ஏற்பட்டிருப்பவர்களிடமிருந்து குறைந்தபட்சம்  ஒரு மீட்டருக்கு மேல் தள்ளி இருத்தல் வேண்டும். கொரோனா வைரஸ் நோய் பாதுகாப்பு என்று எண்ணி அனைவரும் முகக்கவசம்அணிவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சளி, இருமல்  இருப்பவர்கள் மட்டுமேமுகக் கவசங்களை அணிந்து கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்திய முகக்கவசங்களைகுப்பைத் தொட்டிகளில் அப்படியே போடாமல் பயன்படுத்துவோரே அவற்றை அழித்திடுவதோடு குப்பை சேகரிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கும் உதவிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

முன்னதாக,  கை கழுவுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டும், இந்நோய் தாக்கத்தில் இருந்து தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நோய் தடுப்பு, பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென  அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில்,   ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர்,  திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வக்குமார், சேலம் மாநகர  போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)நிர்மல்சன்,  மாநகர் நல அலுவலர்  பார்த்திபன், அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: