மாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு

தர்மபுரி, மார்ச் 20: தர்மபுரியில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்ந்துள்ளதோடு, கிருமிநாசினி திரவத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், தற்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் மனிதர்களின் கைவிரல்கள் மூலம் வெகு விரைவாக பரவுவதால், அடிக்கடி கையை சோப்பு மற்றும் கிருமிநாசினி திரவம் மூலம் 30 வினாடிகள் வரை கைகழுவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பிறரது இருமல், தும்மல் போன்றவற்றின் மூலம், கொரோனா பரவாமல் தடுக்க முகத்திற்கு மாஸ்க் அணிந்து மக்கள் தற்காத்துக்கொள்கின்றனர். இதையொட்டி தர்மபுரியில் பெரும்பாலானவர்கள் முகத்திற்கு மாஸ்க் அணிந்த படி செல்கின்றனர். மேலும் அனைத்து சூப்பர் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்களில் வாயில் முன்பு கிருமிநாசினி, தண்ணீர் பக்கெட் ஆகியவை வைத்து அலுவலகம், கடைகளுக்கு உள்ளே செல்பவர்களை கைகழுவ செய்கின்றனர்.

இதன் மூலம் நோய் தொற்று பரவாமல் தடுக்கப்படும் என்ற நிலையில், முகத்திற்கு அணியும் மாஸ்க், சானிடைசர் எனப்படும் கிருமிநாசினி திரவம் ஆகியவை அதிகம் வாங்கப்படும் பொருட்களாக மாறியுள்ளன. இதனால் ₹3க்கு விற்பனையான முக மாஸ்க், தற்போது ₹27க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல மருந்தகங்கள், கடைகளில் முக மாஸ்க் ஸ்டாக் இல்லை. இதே போல் சானிடைசரும் ₹75க்கு குறையாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திரவத்தில் எம்ஆர்பி இருப்பதால், கூடுதல் விலைக்கு விற்க முடியாவிட்டாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சத்தை தவிர்க்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் உள்ளூரிலேயே முக மாஸ்க்குகளையும், சானிடைசர்களையும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: