கொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

கடலூர், மார்ச் 20: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. வெளிநாடுகளிலிருந்து வந்த 112 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர் அன்புச்செல்வன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. இருந்த போதிலும் கொரோனா வைரஸ் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து வரக்கூடியவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதுபோல்  வெளிநாடுகளிலிருந்து வந்த 112 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறை ஊழியர்களை கொண்டு கண்டறிந்து அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது.அண்டை மாநிலமான புதுவை மாநிலத்தில் வரக்கூடிய வெளிநாட்டினர் அதிகளவில் சிதம்பரம், பிச்சாவரம், கடலூர் வெள்ளிக்கடற்கரை மற்றும் பூங்காவிற்கு வரக் கூடியவர்களை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கண்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்யும் தனியார் நிறுவனங்களை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கெண்டதற்கு  வணிகர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றம் மற்றும் அவற்றின் வளாகங்கள் துப்புரவாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு கிருமி நாசினி பயன்படுத்திய பிறகு உள்ளே அனுமதிக்க வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் உள்ள சலூன் கடைகளில் மாஸ்க் அணிந்து வேலையில் ஈடுபட வேண்டும். மேலும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள தேநீர் கடைகளில் பயன்படுத்தக்கூடிய கிளாஸ்களை  உடனுக்குடன் சுத்தம் செய்து பாதுகாப்பான முறையில் தேநீர் வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்  கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். கடலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மற்றும் மனுநீதி நாள் முகாம்கள்   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

Related Stories: