கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊட்டியில் விடுதிகள் மூடல்

ஊட்டி, மார்ச் 20:  கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊட்டி நகரில் ஒரு சில ஓட்டல்களை தவிர பெரும்பாலான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. நகரில் போக்குவரத்து நெரிசலின்றி உள்ளூர் வாகனங்கள் சென்று வருகின்றன.

 கொரோனா வைரசின் தாக்கம் நீலகிரி மாவட்டத்தில் பரவாமல் இருக்கும் வகையில் பல்ேவறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.   மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி நீலகிரியில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை உட்பட அனைத்து சுற்றுலா தளங்களும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும்  மலைரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடு, கண்ணனூர், கர்நாடகாவின் ைமசூர், குண்டல்பேட்டை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் அரசு பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் ஏராளமானோர் விடுதி அறைகளை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பு விட்டனர்.

 இதன் காரணமாக ஊட்டி நகரில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் மூடப்பட்டு ‘கொரோனா வைரஸ்’ காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மூடப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஓட்டியுள்ளனர். டீக்கடைகள், ஒரு சில உணவகங்கள், இதர கடைகள் திறந்திருக்கின்றன. வெளிமாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஊட்டி வெறிச்சோடி காணப்படுகிறது. நகரில் போக்குவரத்து நெரிசலின்றி உள்ளூர் வாகனங்கள் சென்று வருகின்றன. கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய அரசு பஸ்கள், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல கூடிய அரசு பஸ்கள் பயணிகளின்றி காலியாகவே சென்று வருகின்றன. இதனால் ஒரு சில பஸ்களின் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: