கொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது

ஈரோடு, மார்ச் 20: கொரோனா வைரஸ் பரவுவதால் ஈரோடு மாவட்டத்தில் 144 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், கடையில் மது வாங்கும் குடிமகன்கள் சாலையையே திறந்தவெளி பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் நோய் அங்கிருந்து படிப்படியாக உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. இந்தியாவை பொருந்தவரை இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 152 பேருக்கு இதன் அறிகுறி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அதேபோல,் ஜவுளி, நகைக்கடை, வணிகநிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைந்த 144 பார்களையும்  மூட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டத்தில் 203 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 144 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் கடைகளில் மது வாங்கிக் கொண்டு சாலையையே பார் ஆக மாற்றி அங்கு அமர்ந்து அருந்துகின்றனர்.  பெரும்பாலான பார்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நிலையில் குடிமகன்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். குறிப்பாக, பெண்கள் வெளியே வர தயங்குகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் கடைகளில் மது வாங்கி கூட்டம், கூட்டமாக சாலையில் அமர்ந்து குடித்துவிட்டு போதையில் கும்மாளம் போடுகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களும் இதை கண்டுகொள்வதில்லை. ஒரு சில டாஸ்மாக் பார்களில் பின்புறமாக பாரை திறந்து வைத்துக் கொண்டு திண்பண்டங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதை மதுவிலக்கு போலீசாரும் கண்டுகொள்வதில்லை. சாலையோரத்தில் மது அருந்தும் குடிமகன்களை அப்புறப்படுத்தவும், டாஸ்மாக் பார்கள் முறையாக மூடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: