கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு

ஈரோடு, மார்ச் 20:  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரோட்டில் ஜவுளி, நகைக்கடைகள் நேற்று முதல் அடைக்கப்பட்டது. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர பகுதிகளில் உள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று ஈரோடு கடைவீதியில் மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர்ரோடு, கிருஷ்ணா தியேட்டர் ரோடு, காவிரி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் என 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஈரோட்டில் உள்ள ஜவுளிகடைகள், நகைக்கடைகள் மூலம் தினமும் 25 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் இருக்கும். தற்போது கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்தக இழப்புடன் தொழிலாளர்களும் வேலையிழந்து வருகின்றனர். வரும் 31ம் தேதி வரை விடுமுறை விட அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தங்களுக்கு ஊதியம் கிடைக்குமா? என ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளன. இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் தொடர்பாக திடீரென கடைகளை மூடக்கூறியுள்ளதால் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரமும் இல்லாததால் எங்களுக்கு ஊதியம் வழங்குவார்களா? என தெரியவில்லை’ என்றனர்.

Related Stories: