கொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு

ஈரோடு, மார்ச் 20:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.ஈரோடு ஆர்கேவி சாலையில் நேதாஜி தினசரி காய்கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்க்கெட்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, சுகாதாரம் ஆகியவை குறித்து மாநகாரட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். மேலும், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:ஈரோடு தினசரி மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து லாரிகளில் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரிகளை சுத்தம் செய்வது தொடர்பாகவும், காய்கறிகளை சுத்தமாக கழுவி விற்பனை செய்வது தொடர்பாகவும் வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கடையிலும் கட்டாயம் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு வியாபாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்பதோடு காய்கறி வாங்க வரும் மக்களையும் கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடை மற்றும் மார்க்கெட் வளாகத்தில் கிருமிநாசினி கரைசல், பவுடர் தெளிப்பது குறித்தும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: