கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை

நாகர்கோவில், மார்ச் 20: கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கை கழுவ தனி அறை திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளியிடங்களுக்கு செல்கிறவர்கள் தினமும் 20 முறை கை கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கைகளை சுத்தப்படுத்த சானிட்டைசர் வழங்கப்பட்டது. சானிட்டைசர் திரவத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கைகளை கழுவ திரவம் விநியோகிக்கப்பட்டு கை கழுவ சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆதார் மைய செயல்பட்டு வந்த இடத்தில் கை கழுவதற்காக பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனி பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

குமரி மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கும் கை கழுவுவதற்கு மருந்து பொருட்கள், திரவ சோப்பு வழங்கப்படுகிறது. நாகர்கோவிலில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி கல்லூரிகள், பஸ் நிறுத்தங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுண்ணாம்பு தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியிலும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அறிவுரை வழங்கியுள்ளதால் பல்கலைக்கழகங்கள் சார்பில் நேற்று முதல் நடைபெற வேண்டிய தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கல்லூரிகளுக்கு வந்த மாணவ மாணவியர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாகர்கோவில், கோட்டார், சரலூர் பகுதியில் மாட்டு சந்தை உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவில்பட்டி, மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் மாடுகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாட்டு சந்தையில் நேற்று காலையில் மாடுகள் வரத்து கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் வழக்கமாக நடைபெறுகின்ற அளவிற்கு வியாபாரம் நடைபெறவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: