ஒரே இடத்தில் 800 பேர் பணியாற்ற வேண்டும் குமரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 2 மையங்கள்

நாகர்கோவில், மார்ச் 20: குமரி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த 2ம் தேதி தொடங்கியது. தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்த அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 44 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் திருத்த வேண்டிய விடைத்தாள்கள், கடந்த 9ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த விடைத்தாள்கள் அனைத்து மையங்களுக்கும் 29ம் தேதி சென்று சேரும். அதன்பின் 31ம் தேதி அன்று, முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள். ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை துணைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள். அதற்கு பிறகு சம்பந்தப்பட்ட மொழிப்பாட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தத் தொடங்குவார்கள். இதையடுத்து, பிற பாடத்துக்கான விடைத்தாள்கள், அந்தந்த மையங்களுக்கு 30ம் தேதி சென்று சேரும். 31ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவார்கள். ஏப்ரல் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை துணைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள். அதற்கு பிறகு அந்தந்த பாட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த பணிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் என்று நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ள நிலையில் 2 கல்வி மாவட்டங்களுக்கு ஒன்று வீதம் 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வரும் 31ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளது. ஒரு மையத்திற்கு 800 ஆசிரியர்கள் வரை விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. குமரி மாவட்டத்தையொட்டிய கேரள மாநில பகுதியில் கொரோன பாதிப்பு அதிகம் உள்ளதால் குமரி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது பிளஸ் 2 தேர்வுக்கு குழித்துறை, திருவட்டார் கல்வி மாவட்டங்களுக்கு திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில், தக்கலை கல்வி மாவட்டங்களுக்கு ஆசாரிபள்ளம் பெல்பீல்டு மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை போன்று 10ம் வகுப்புக்கு நாகர்கோவில், தக்கலை கல்வி மாவட்டங்களுக்கு ராமன்புதூர் சிறுமலர் மகளிர் மேல்நிலை பள்ளி, குழித்துறை, திருவட்டார் கல்வி மாவட்டங்களுக்கு மார்த்தாண்டம் குட்ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளி ஆகியன தேர்வு மையங்களாக ஏற்படுத்தப்பட்டுள்னள.

இது தொடர்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வினித் கூறுகையில், ‘விடைத்தாள் திருத்தும் மையங்களை கல்வி மாவட்டத்திற்கு ஒன்று வீதம் தனித்தனியே 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டால் மையங்களுக்கு 400 வீதம் என்று ஆசிரியர்கள் குறைவான எண்ணிக்கையில் ஒவ்வொரு மையங்களிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் ஒரே இடத்தில் குவிந்தால் கொரோனா பரவல் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார வசதிகளை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: