திட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்

வேலூர், மார்ச் 20: வேலூர் மாநகராட்சியில் கொரோனா முன்னெச்சரிக்கையாக திட்ட பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு பயன்படுத்த வீடியோ கான்பரன்ஸ் அறைக்கு ஏற்பாடு செய்வதை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை, கிரிமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பெரும்பாலான ஐடி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் கலெக்டர் அலவலகங்களில் குறைதீர்வு கூட்டங்கள், உள்ளிட்ட பொதுநிகழ்ச்சிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திட்டப்பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு சென்னைக்கு வர வேண்டாம். அந்தந்த மாநகராட்சி அலுவலகங்களிலேயே வீடியோ கான்பரன்ஸ் அறை ஏற்பாடு செய்து, இனி ரிவியூவ் மீட்டிங்கை, வீடியோ கான்பரன்ஸ் மூலமே நடத்த வேண்டும் என்று நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் மாநகாட்சி அலுவலகத்தில் தரைத்தளத்தில் வீடியோ கான்பரன்ஸ் அறை நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அறையை மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் கண்ணன், உதவிபொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கையாக மாநகராட்சி அதிகாரிகள் முக்கிய பணிகளை தவிர்த்து வேறு எதற்கும் நேரடியாக சென்னைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை ஏற்பாடு செய்ய நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மாநகராட்சியில் வீடியோ கான்பிரன்ஸ் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும்காலங்களில் முக்கியமான மீட்டிங்குகளை தவிர்த்து மற்ற அனைத்து மீட்டிங்கும் வீடியோ கான்பரன்ஸ் மூலமே நடைபெறும்’ என்றார்.

Related Stories: