மக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுநீதி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து

திருச்சி, மார்ச் 19: திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளதாவது:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் உள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பெரு வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் பார், திரையரங்குகள், சந்தைகள் ஆகியவற்றிற்கு வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, காவல்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.வெளி மாநிலத்திற்கு செல்லும் மற்றும் வரும் ஆம்னி பஸ்கள், கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் வாகன உரிமையாளர்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு பயணிகளை கண்காணித்து வருகின்றனர்.நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தற்காத்து கொள்வது தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சோப்பு போட்டு கைகழுவும் பழக்கத்தை கடைப்பிடித்தால் இந்நோயிலிருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள முடியும். அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: