பொன்னணியாறு உபவடிநிலப் பகுதியில் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்

திருச்சி, மார்ச் 19: மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் பொதுப்பணித்துறை நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் பொன்னணியாறு உப வடிநிலப் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை புனரமைக்க ரூ.4.85 கோடி மதிப்பீட்டில் பழுதுகள் மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை திருச்சி நடுக்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆய்வு செய்தார். மணப்பாறை வையம்பட்டி பகுதிகளில் 4 ஏரிகளும், 13 அணைக்கட்டுகளும், ரூ.4.85 கோடியில் பணிகள் நடைபெற்று வருவதை நடுக்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டைசெல்வம் பார்வையிட்டு கூறியதாவது: மணப்பாறை வட்டத்தில் பொன்னணியாறு உப வடிநிலப்பகுதியில் உள்அடங்கிய பொன்னணி ஆறானது, ஒரு காட்டாறாக கடவூர் மலைப்பகுதியில் உற்பத்தியாகி, மணப்பாறை மற்றும் ரங்கம் வட்டங்களில் முதல் 16 கி.மீ. தூரத்திற்கு பொன்னணியாறாகவும், அடுத்த 16 கி.மீ. தூரத்திற்கு மாமுண்டி ஆறாகவும், கடைசி 20 கி.மீ. தூரத்திற்கு அரியாறாகவும் பயணித்து, திருச்சி தீரன்நகர் பகுதியில் கோரையாற்றில் கலக்கிறது. இந்த பொன்னணியாற்றுக்கு கண்ணூத்து ஆறு, தெற்குமலையாறு, டொம்பச்சி ஆறு மற்றும் உப்பாறு வாரி ஆகிய கிளை ஆறுகளும் இதில் கலக்கிறது. பொன்னணியாறு உப வடிநிலப் பகுதியின் கீழ் மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, வையம்பட்டி, தோகைமலை, விராலிமலை வட்டாரங்களில் 40 ஹெக்டேருக்கு மேல் உள்ள 104 குளங்கள், ஏரிகள் மூலம் 7,276.52 ஹெக்டேர் பாசனவசதி பெறும் வகையிலும் 40 அணைக்கட்டுகளின் மூலம் 2,604.53 ஹெக்டேர் பாசன வசதிபெறும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்த நீர்வள நிலவளத்திட்டத்தில் பொன்னணியாறு உப வடிநிலப் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை புனரமைப்பதற்காக நீர்வள நிலவளத்திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, சிப்பங்களாக பிரித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குழுமிகள், கலிங்குகள் பழுதுகள் மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளும், கரைகள் பலப்படுத்தும் பணிகளும், அணைக்கட்டுகளில் பழுதுகள் மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டுவருகிறது’ என்றார்.இவற்றில் மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் பேக்கேஜ் எண்.8 மற்றும் 9ல் நடைபெற்றுவரும் ஏரிகள், குளங்கள் மற்றும் அணைக்கட்டு புனரமைப்புப் பணிகளை திருச்சி, நடுக்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளரால் ஆய்வு செய்யப்பட்டது. பேக்கேஜ் எண்.8ன் கீழ் ரூ.1.89 கோடியில் 4 ஏரிகளிலும், 13 அணைக்கட்டுகளிலும், பேக்கேஜ் எண்.9ன் கீழ் ரூ.2.96 கோடியில் பொன்னணியாறு அணையின் கீழ் அமைந்துள்ள பாசன வாய்க்கால்கள் சுமார் 6,225மீ அளவிலும் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். ஆய்வில் அரியாறு வடிநில கோட்ட செயற் பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் தயாளகுமார், இளம்பொறியாளர் அடைக்கண் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: