கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளி மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

அரியலூர், மார்ச் 19: கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதை தடுக்க வேண்டுமென அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா கேட்டுக்கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டம், எருத்துகாரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செந்துறை நான்குரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்படும் பணியினை மாவட்ட ஆட்சியர் ரத்னா பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: கொரோனா வைரஸ் நோய் உலக அளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லை என்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விமான நிலையங்கள் உள்ள மாவட்டம், தமிழ்நாடு எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தற்காலிகமாக மூடிவைக்க உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் 31.3.2020 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மை படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து. எருத்துகாரன்பட்டி, செந்துறை நான்கு ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்த்தில் கிருமி நாசினி தெளிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இப்பணிகள் தினந்துதோறும் நடைபெறும். மேலும், கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களிலும் இருகைகள், அறைகள் அனைத்தையும் தூய்மைபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை காக்க வேண்டும். குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாகவும் கழிவிட வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம். இதனை குழந்தைகளையும் பின்பற்ற வைக்க வேண்டும். சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும். மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். இந்நிகழ்வில், கோட்டாட்சியர் பாலாஜி, உதவி இயக்குநர் பழனிசாமி, வட்டாட்சியர் சந்திரசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் பரமசிவம் மற்றும் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: