புதுச்சேரி மாநிலமல்ல என்பதை முதல்வர் ஏற்றிருப்பார் என நினைக்கிறேன்

புதுச்சேரி, மார்ச் 19: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வுக்கு செல்லலாம்,  அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவிட முடியாது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு கருத்துகளை அனுப்ப வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதனடிப்படையில் துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என நினைக்கிறேன். அவர் மீறி செயல்பட்டால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

இதனை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் கிரண்பேடி பதிலுக்கு விமர்சித்துள்ளார். தற்போதைய தீர்ப்பின்படி புதுச்சேரி நிர்வாகமானது யூனியன் பிரதேச சட்டம் மற்றும் நிதி மற்றும் நிர்வாக விதிகளின்படி நடக்கிறது என்பது தெளிவாகிறது.ஏற்கனவே வெளியான தீர்ப்புகளில் தேர்தல் ஆணையர் நியமனம், இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் ஆகிய தீர்ப்புகளிலும் இதே சட்டங்களும், விதிகளும் உறுதி செய்யப்பட்டன.

கடந்த மூன்று நீதிமன்ற வழக்குகளிலும் முதல்வர் உண்மையில் தோல்வியடைந்தார். ஆனால், மக்களிடம் அதை பகிர்ந்து கொள்ளவில்லை. தற்போது அதை நேரடியாக தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறேன். மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். இத்தீர்ப்பு ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாசுக்கான வெற்றி அல்ல. நாங்கள் இங்கு வெல்லவோ, தோற்கவோ இல்லை. சேவை செய்யவே வந்திருக்கிறோம். நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டங்களையும், விதிகளையும் அதை குடியரசுத்தலைவர் வழங்கியதையும் பின்பற்றி செய்கிறோம். அரசு அதிகாரிகள் அச்சமின்றியும், பாரபட்சமின்றியும் பணியாற்ற முதல்வர் அனுமதிக்கவேண்டும். அத்துடன் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட அவர்களை மதிக்கவும் வேண்டுமென கோருகிறேன்.

மூன்று தீர்ப்புகளும் இந்திய அரசுக்கும், கவர்னருக்கு ஆதரவாக வந்த பிறகு, புதுச்சேரி மாநிலமல்ல என்பதை முதல்வர் ஏற்றிருப்பார் என்று நினைத்திருந்தேன். நான் இங்கு கவர்னராக வருவதற்கு முன்பே, புதுச்சேரி யூனியன்பிரதேச சட்டம், வணிக மற்றும் நிதி சட்டங்களின் கீழ்தான் நிர்வகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: