தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

திண்டிவனம், மார்ச் 19: திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் உள்பட மொத்தம் 5பேரை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை பிடிக்க, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி மேற்பார்வையில், ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அகூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த 2 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரை சோதனை செய்தனர்.

அப்போது போலீசாரை கண்டதும் இருவர் தப்பி ஓடிய போது தவறி விழுந்து கை எலும்பு முறிந்தது. அவர்களை பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று  விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் 5 பேரும் வந்தவாசி பகுதியை சேர்ந்த முத்து மகன் அஜய் (19), (பாலிக்டெக்னிக் மாணவர்), மகேந்திரகுமார் மகன் மனோஜ்குமார் (19) (ஐடிஐ படித்துள்ளார்), சக்திவேல் மகன் ஆனந்த் (18), மணிகண்டன் மகன் அசோக்குமார்(17), செல்லப்பன் மகன்  முருகன்(16) என்பதும் தெரியவந்தது.

இதில் அசோக்குமார் மீது செங்கல்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வழிப்பறி வழக்குகளும், ஆனந்த், மனோஜ் குமார் ஆகியோர் மீது வந்தவாசி காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இவர்கள் பகல் நேரங்களில் கல்லூரிகளுக்கு சென்று விட்டு,  மதுவாங்கவும், செலவுக்காகவும் இரவு நேரங்களில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனம், கத்தி, 3 பவுன் தங்க நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் வழிப்பறி செய்யும் பணத்தை மதுவுக்காக செலவழிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவர்கள் போலீசாரை கண்ட உடன் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பித்து ஓட முயன்றனர்.

அப்போது மது போதையில் இருந்த அஜய் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் தடுக்கி விழுந்ததில் மனோஜ் குமாருக்கு வலது கையிலும், அஜய்க்கு இடது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.  இவர்களுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டது. பின்னர் 18 வயதுக்கு குறைவான 3 பேரையும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்ற  இருவர் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Related Stories: