குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தடையை மீறி சிறை நிரப்பும் போராட்டம்

கடலூர், மார்ச் 19: கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், இதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தடையை மீறி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தின. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க மற்றும் தடுக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், இதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் பேரணியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது  ஆனால் போலீசார் பேரணிக்கு அனுமதி மறுத்தனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து கூட்டம் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தின. தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் ஷேட் முஹம்மது தலைமை தாங்கினார். ஜமால் உஸ்மானி கண்டன உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் காதர் பாஷா, பொருளாளர் உமர்பாரூக், துணைத் தலைவர் யாசின், துணை செயலாளர்கள் அப்துல் வகாப், யாசர், ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை தடை செய்யும் வகையில் சீர்குலைக்க முயன்றதாகவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் ரகத்துல் முஸ்லிம் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த பண்ருட்டி மன்சூர், அப்துல் ரசாக், கடலூர் அப்துல் ரசாக், முஹம்மத், அகமத் உள்ளிட்டவர்கள் மீது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் காதர் பாஷா கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Related Stories: