ஆண்டாங்கோயில் ராம்நகரில் தண்ணீரின்றி பொலிவிழந்த பூங்கா

கரூர், மார்ச் 19: ஆண்டாங்கோயில் பூங்காவில் தண்ணீரின்றி பொழிவிழந்து வருவதால் சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அருகே உள்ள ஆண்டாங்கோயில் கீழ்பாகம் ஊராட்சியில் ராம் நகரில் பூங்கா அமைக்கப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் தினந்தோறும் பூங்காவுக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு பூங்காவுக்கு வருவோர் பயன்படுத்துவதற்காக குடிநீர் வழங்குவதற்காக சின்டெக்ஸ் டேங்க் அமைத்து அதன் மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. மேலும் குடியிருப்போர் சங்கம் மூலமாக சொட்டுநீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலமாக பூங்காவில் உள்ள செடிகள், மரக்கன்றுகளை பராமரித்து வந்தனர். சமீப காலமாக தொட்டியில் தண்ணீர் விநியோகம் இல்லை. இந்நிலையில் தற்போது கோடை துவங்கும் முன்னதாகவே கடந்த மாதத்திலிருந்தே வெயில் கடுமையாக அடிக்க துவங்கி விட்டது.

மேலும் தற்போது வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பூங்காவில் உள்ள செடிகள் கருகி வருகின்றன. பூங்காவும் பொலிவிழந்து காணப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வருகிற 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் பொழுது போக்கிற்காக மாலை நேரத்தில் பூங்காவிற்கு சிறுவர்கள் அதிகமாக வருகின்றனர். மேலும் விளையாடவும் வருகின்றனர். இவர்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே அழகை இழந்துவரும் பூங்காவினை சீர்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுததுள்ளனர். இப்பகுதியில் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தவில்லை. இதனால் லட்சக்கணக்கில் வீடுகளை கட்டியும் அடிப்படை வசதியின்றி தவிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: