கைகளை துடைக்க வழங்கிய திரவத்தை குடிக்க முயன்ற முதியவர்

நாகர்கோவில், மார்ச் 19: நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கைகளை துடைக்க வழங்கிய திரவத்தை முதியவர் ஒருவர் குடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் நுழையும்போது அவர்கள் அனைவரும் கை கழுவ சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக பணியாளர்களின்றி பொதுமக்களும் கை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணியாளர்களால் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கை கழுவ திரவம் வழங்கப்படுவதுடன் கைகளை துடைத்துக்கொள்ளவும் திரவம் வழங்கப்படுகிறது. மேலும் கைகளை துடைத்துக்கொள்வதற்கான திரவத்தை கலெக்டர் அலுவலகம் உள்ளே நுழைகின்ற பணியாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கலெக்டர் அலுவலக பணியாளர்கள் வழங்கினர். இதனை கையில் பெற்றுக்கொண்ட முதியவர் ஒருவர் திடீரென்று அந்த திரவத்தை குடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை விநியோகம் செய்த பணியாளரே அவரை தடுத்து அதனை சாப்பிடக்கூடாது, கைகளில் துடைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்ட நிலையில் பலரும் அதனை வாங்கி பருகிக்கொண்டனர். இதனால் இதுவும் அதுபோன்ற ஒன்று என்று எண்ணி முதியவர் உட்கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மருந்தகங்களிலும், ஸ்டோர்களிலும் முக கவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிகாரிகள் நாகர்கோவில் நகர பகுதியில் மட்டும் சோதனை நடத்தி வருகின்ற நிலையில் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சோதனை நடத்தி, கை கழுவும் திரவம், முக கவசம் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: