கொரோனா வைரஸ் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள் விழிப்புணர்வு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்

தூத்துக்குடி, மார்ச் 19:  கொரோனா  வைரஸ் எதிரொலியாக கோவில்பட்டி உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் பெரும்பாலான சாலைகள், வீதிகள் வெறிச்சோடி கிடக்கும்நிலையில் விழிப்புணர்வு நடவடிக்கையில் உள்ளாட்சி துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்  31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ்  தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் சுகாதாரத் துறையோடு உள்ளாட்சி துறை தீவிரம் காட்டி வருகின்றன.  கோவில்பட்டி: தூத்துக்குடி  மாவட்டத்தில் தூத்துக்குடியை அடுத்து 2வது நகரமாகத் திகழும் கோவில்பட்டியிலும் அரசின் உத்தரவுபடி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 31ம் தேதி வரை  விடுமுறை விடப்பட்டுள்ளது. விரைவில் அரசு தேர்வுகள் நெருங்கி வரும்  நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் இந்த விடுமுறையை பயன்படுத்தி கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலான கிராமங்களில்  ஒரு சில மாணவர்கள் அருகேயுள்ள கண்மாய், குளங்களில் கோடை வெயிலின்  தாக்கத்தில் இருந்து விடுபட ஆசை தீர நீச்சலடித்து குளித்து மகிழ்கின்றனர். மேலும்  ஒரு சில மாணவர்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட்  விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

 இதனிடையே கொரோனா வைரஸ்  எதிரொலியாக கோவில்பட்டியில் பெரும்பாளான சாலைகள், வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. குறிப்பாக நகரில் உள்ள முக்கிய வீதிகள்  அனைத்தும் பகலில் ஆள்நடமாட்டமின்றி காணப்படுகின்றன. அண்ணா பஸ்நிலையம்,  ரயில்நிலையம், நகராட்சி தினசரி மார்க்கெட், பூமார்க்கெட், கோயில்கள் போன்ற  இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்த அளவில் உள்ளது. நகரில் உள்ள  தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் வரும் 31ம் தேதி வரை மூட  உத்தரவிட்டுள்ள நிலையில் தங்கும் விடுதிகள் சுகாதாரமாக உள்ளனவா என கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் திருமண  மண்டப உரிமையாளர்கள், ஆம்னி பஸ், ஆட்டோ ஓட்டுநர்கள், மகளிர் குழு  உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து  நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் உள்ள ராமசாமிதாஸ் நினைவு  நகராட்சி பூங்காவும் மூடப்பட்டுள்ளது.

  நகராட்சி மற்றும் ரோட்டரி  சங்கம் சார்பில் அண்ணா பஸ் நிலையம், ரயில்நிலையம், நகரில் செயல்படும்  டூரிஸ்ட் கார், ஆட்டோ, மினிவேன், வேன் போன்ற ஸ்டாண்டுகளில் உள்ள  ஓட்டுநர்கள், பயணிகள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் விதம்  பற்றியும், அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குளித்தும்  விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுவது  குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆட்டோ, மினிவேன், வேன் போன்ற  வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கொரோனா  வைரஸ் எதிரொலியாக கோவில்பட்டியில் இருந்து மற்றும் கோவில்பட்டி வழியாக  செல்லும் ஆம்னி பஸ் மற்றும் அரசு விரைவு பஸ்களில் கிருமிநாசினி  தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டி பைபாஸ்ரோட்டில் உள்ள கூடுதல்  பஸ் நிலையத்தில் நகராட்சி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம்  சார்பில் சென்னை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை,  கோவை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பஸ்  நிலையத்தில் வந்து நிற்கும் செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களில் நகராட்சி  கமிஷனர் ராஜாராம் ஆலோசனைப்படி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்  முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.  இப்பணிகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வரும் 31ம் தேதி வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

இதே போல் எஸ்.பி. அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரிலும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ்  ஆலோசனையின் படியும் நகராட்சி சார்பில் போக்குவரத்து காவலர் நிலையத்தில் அனைத்து  போக்குவரத்து காவலர்களுக்கு கைகளை சோப்புபோட்டு சுத்தமாக கழுவுவது குறித்து  செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து காவல்நிலையத்தில்  கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நகர, வட்டார  தமாகா சார்பில் அரசு மற்றும்  தனியார் பஸ்கள், மினிபஸ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு  வருமுன் காப்போம் எனும் அடிப்படையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகரத்  தலைவர் ராஜகோபால் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ்,  வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, நகர துணைத்தலைவர் வீரபுத்திரன், மூர்த்தி முன்னிலையில் முகக் கவசம் வழங்கினர்.

பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க அறிவுரை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்கள், பஸ்கள், ஆட்டோக்கள், பஸ் நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.  கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. கைகளை கழுவுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இதை  கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோரம்பள்ளம் இளைஞர்கள் சார்பில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க் வழங்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தூத்துக்குடியில் வீடுவீடாகச் சென்று கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

 இதனிடையே வட்டார போக்குவரத்து துறை சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் பஸ்கள், மினிபஸ்களில் கெரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினர். கலெக்டர் தலைமையிலான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூட்டங்கள் கூடுவதை தடுக்க முயற்சி செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர ஏற்கனவே புக் செய்யப்பட்டுள்ளது போக தற்போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபங்களை அட்வான்ஸ் புக்கிங் செய்யவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுபொருட்கள் விற்பனை முற்றிலும் நின்ற நிலையில் மீன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மீன்கள் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. குறிப்பாக திரேஸ்புரம் கடற்கரை பகுதிகளில் பிடித்து வரப்படும் மீன்கள் வழக்கத்தை விடவும் அதிக விலைக்கு ஏலம் போயின.  காய்கறிகள் விலையும் மார்க்கெட்டுகளை விட, வெளிக்கடைகளில் அதிகரித்துள்ளது. சாலைகளில் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது.பொதுமக்கள் நடமாட்டம் வழக்கத்தை விடவும் குறைந்து 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலை போல மாறியுள்ளது.

Related Stories: