கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தினந்தோறும் மாவட்ட வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும்

வேலூர், மார்ச் 19: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தினந்தோறும் மாவட்ட வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் மற்றும் முக்கிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் பஸ், ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழ்நாட்டின் எல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்ன என்பது குறித்து தெரிய வேண்டும். பல்வேறு துறைகள், தனியார் அமைப்புகள் மற்றும் சுகாதாரம் குடும்பநலத்துறை உடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் கண்டறிந்து அதுகுறித்து அவ்வப்போது விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும். இதுதவிர தினந்தோறும் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு மாவட்ட வாரியாக அனுப்பி வைக்க வேண்டும். ரயில், பஸ் நிலையங்களில் எத்தனை பயணிகளுக்கு தெர்மல் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினி எத்தனை இடங்களில் தெளிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறைக்கு எத்தனை புகார்கள் வந்தது போன்றவை குறித்து அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் செயலாக்க தனி அதிகாரி நியமிக்கப்படவேண்டும். அவரின் பெயரும் தொலைபேசி எண்ணும் மற்ற துறை அலுவலர்களுக்கு தரப்பட வேண்டும். சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்கள், இதர ஊழியர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் செயல்படும் விதத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட வேண்டும். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண், எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: