பொத்திபாளையம் பஞ்சாயத்து பகுதி கிராமத்தில் போர்வெல் தண்ணீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை

காங்கயம், மார்ச் 19:பொத்திபாளையம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட அவிநாசிபாளையம் கிராமத்தில் உள்ள போர்வெல் தண்ணீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. காங்கயம் ஒன்றியம் பொத்திபாளையம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட அவிநாசிபாளையம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுக்கு முன் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் போர்வெல் அமைக்கப்பட்டு, மேல்நிலை தொட்டியில் நீர் தேக்கி வைத்து பயன்படுத்தி வந்தனர். இந்த கிராமத்திற்கு அருகில் இயங்கி வரும் தொழிற்சாலையில், தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர், கார்பன் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் இதன் கழிவு நீரை பூமிக்கடியில் செலுத்தப்படுவதாகவும் இதனால், இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மாசடைந்து, குடிநீரைப் பயன்படுத்த முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.  

இதையடுத்து கடந்த மாதம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களால் சம்பத்தப்பட்ட போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து ஆய்வுக்காக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் கீழ் இயங்கும் கோவை தலைமை நீர் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் போர்வெல் தண்ணீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்தது இல்லை என பொத்திபாளையம் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பகுதி மக்கள் மாசடைந்த போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யக்கூடாது, மக்களின் தண்ணீர் தேவைக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: