தீ தடுப்பு கோடு அமைப்பதில் வனத்துறை கண்துடைப்பு சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

உடுமலை, மார்ச் 19:உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் கண்துடைப்பாக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் கடும் வறட்சி நிலவுவதால் புற்கள் காய்ந்து காணப்படுகின்றன. இதனால் கோடையில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது வழக்கம். இதற்காக வனத்துறைக்கு பல ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக காய்ந்த புற்களை வெட்டி அகற்றுதல், தீவைத்து எரித்தல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் தீத்தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை, சாலையின் இருபுறமும் புற்கள் வளர்ந்து காய்ந்து கிடக்கின்றன. அவ்வழியே வாகனத்தில் செல்வோர் சிகரெட் துண்டுகளை வீசி எறிந்தால் எளிதில் தீப்பிடித்துவிடும். எனவே, இருபுறமும் 3 மீட்டர் அகலத்துக்கு புற்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் மூணாறு சாலையின் ஒரு பக்கம் மட்டுமே புற்கள் வெட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் தீவைத்து புற்கள் கருகி உள்ளன. சாலையின் மற்றொரு புறத்தில், குறிப்பாக அமராவதி வனச்சரக பகுதியில் பெயருக்கு சில இடங்களில் மட்டும் புற்களை வெட்டிவிட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் புற்கள் வளர்ந்து நிற்கிறது. இதனால் வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்துடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல், ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி, முழுமையாக தீத்தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: