கையை கழுவி பின்னர் உள்ளே வாங்க புகார் மனுதாரர்களுக்கு போலீசார் அறிவுரை

திருவள்ளூர், மார்ச் 19: புகார்தாரர்கள் மத்தியில் ‘கொரோனா’ விழிப்புணர்வு ஏற்படுத்த, திருவள்ளூர் டவுன், தாலுகா உட்பட அனைத்து போலீஸ் நிலையம் முன், கை கழுவ பக்கெட்டுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட்டு உள்ளது.

‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு, பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள் மத்தியில், கை கழுவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வெளியில் சென்று வீடு திரும்புவோர், கைகளை கழுவிய பின்பே பிற பணிகளை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதை பணிக்கு சென்று வரும் போலீசார் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் மனுதாரர்களும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, திருவள்ளூர் டவுன், திருவள்ளூர் தாலுகா உட்பட அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு முன், போலீசார் குழாய் பொருத்தி, பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைத்துள்ளனர். அங்கு சோப்பும் வைத்துள்ளனர்.

போலீஸ் நிலையத்துக்கு வருவோர், கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னரே, உள்ளே வரவேண்டும்’’ என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, எஸ்.பி., அரவிந்தன் கூறுகையில், ‘கை கழுவுதலின் அவசியம் மற்றும் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டிய அவசியம், ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் நிலையங்கள் அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்துள்ளோம்’ என்றார்.    

Related Stories: