ரோட்டில் கொட்டகை போட்டு ஆக்கிரமிப்பு

விருதுநகர், மார்ச் 19: விருதுநகரின் அனைத்து சாலைகளும் ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி விட்டது. மக்கள் நடந்து செல்ல வேண்டிய சாலையோரங்கள் கடையினரால் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. சில கடையினருக்காக மக்களை மாவட்ட, நகராட்சி மற்றும் போலீஸ் நிர்வாகங்கள் இன்னலுக்கு ஆளாக்கி வருகின்றன. இந்நிலையில் நகரில் மாரியம்மன் கோவில் அருகில் கச்சேரி ரோட்டில் உள்ள கடை ஒன்றின் முன்பு பக்காவான கொட்டகையை நிரந்தரமாக அமைத்து 10 நாட்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு போலீஸ், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அனுமதி எதுவும் பெறவில்லை என கூறுகின்றனர்.

சாலையோரத்தில் பெட்டி, தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளை இம்சைபடுத்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இது போன்ற பெரிய கடையினர் செய்யும் ஆக்கிரமிப்பை கண்டு கொள்வதில்லை. பங்குனி பொங்கலை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் சாலையை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்துள்ளனர்.அதையும் தாண்டி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இது போன்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு எந்த வகையிலும் உறுதுணையாக இருக்க கூடாது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: