முன்பதிவு காலம் முடியும் வரை தங்கி செல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஊட்டி, மார்ச் 19:  நீலகிரியில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன்பதிவு காலம் முடிவடையும் வரை தங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நீலகிரியில் கொரோன பரவாமல் தடுக்கும் நோக்கில் நீலகிரி மாவட்ட வரலாற்றில் முதல் முறையாக தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தளங்களும் கடந்த 17ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டல், காட்டேஜ் மற்றும் ரீசார்ட்டுக்களில் உள்ள வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் உடனடியாக காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன்பதிவு காலம் முடிவடையும் வரை தங்கி செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவிற்கு இனங்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளை 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை மூட வேண்டும்.

எவ்வித முன்பதிவுகளும் மேற்கொள்ள கூடாது எனவும், ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே முன்பதிவு செய்து தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவர்களது முன்பதிவு காலம் முடியும் வரை தங்கி செல்ல அனுமதி வழங்குமாறு பல்வேறு தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பேரில் ஏற்கனவே முன்பதிவு செய்து தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவர்களது முன்பதிவு காலம் முடிவடையும் வரை தங்கலாம். வரும் 31ம் தேதி வரை மேற்கொண்டு புதிதாக எவ்வித முன்பதிவும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

Related Stories: