துணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து

காஞ்சிபுரம், மார்ச் 19:  காஞ்சிபுரம் நடுத் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (38), இவரது உறவினர் கணேஷ் (34). இருவரும் ஒரே குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து, அதே பகுதியில் பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்கள்  இவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக, துணிப்பைகளை வெளி இடங்களில் தயார் செய்வது வழக்கம்.அதன்படி சின்னையன் குளம் பகுதியில் நாகபுஷ்பம் என்ற பெயரில் துணிப்பைகள் தயாரிப்பவர் மனோகரன் (60). இவரிடம், பாலாஜி ஷா மற்றும் கணேஷ் ஷா ஆகியோர், தங்களது கடைக்கு தேவையான துணிப்பைகள் ஆர்டர் கொடுத்து வாங்கி வந்தனர். ஆனால், அந்த துணிப்பைகள் தரம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால், மனோகரனை விட, குறைந்த விலை மற்றும் தரமாக துணிப்பை விற்பவர்கள் குறித்து, விசாரித்து வந்தனர். அதில் அவர்களுக்கு, சிலருடன் பேச்சு வார்த்தை நடந்தது.இதையறிந்த நாகபுஷ்பம், தன்னிடம் துணிப்பை வாங்காமல், வேறு யாரிடமும் வாங்கு கூடாது என கூறி, கடை உரிமையாளர்களான கணேஷ், பாலாஜி ஆகியோரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால், அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடை உரிமையாளர்கள் வீட்டுக்கு மனோகரன், அவரது மகன் ராஜா (32) உள்பட 3 பேர் நேற்று காலை சென்றனர். அங்கு மீண்டும் தங்களிடம் துணிப்பை வாங்காதது குறித்து தகராறு செய்தனர். இதில், வாக்குவாதம் முற்றி கை கலப்பானது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும், சகோதரார், மறைத்து வைத்திருந்த கத்தியால், பாலாஜி ஷாவை குத்தினர். இதை பார்த்த கணேஷ் ஷா, அவர்களை தடுத்தார். அவரது வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு, அவர்கள் தப்பிவிட்டனர்.இதில் படுகாயமடைந்த 2 பேரும் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து கணேஷ் ஷா மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்படி விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மனோகரன், ராஜா ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: