கருமத்தம்பட்டியில் பரபரப்பு பிடி வாரண்டை வாயில் போட்டு மென்று விழுங்கிய கோவை ஆசாமி

சூலூர்,மார்ச் 19: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். அரசியல் கட்சி பிரமுகரான இவருக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு கம்பெனிக்கும் வரவு-செலவு இருந்துள்ளது. இதில் கர்நாடக கம்பெனிக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தங்கவேல் கொடுத்துள்ளார். அதை, அந்த நிறுவனம் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது.இதைத்தொடர்ந்து கர்நாடக கம்பெனி, தங்கவேலு மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. வழக்கு தொடர்பாக தங்கவேலுவை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவாரண்டுடன் நேற்று முன்தினம் கர்நாடக போலீசார் கருமத்தம்பட்டியுல் உள்ள தங்கவேலு வீட்டிற்கு சென்றனர். கர்நாடக போலீசார் உள்ளூர் போலீசிற்கு தகவல் சொல்லாமல் நேரிடையாக தங்கவேலு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது தங்கவேலு, கர்நாடக போலீசாரிடம் ‘‘பிடிவாரண்ட் இருக்கிறதா?’’ என கேட்டுள்ளார். பதிலுக்கு போலீசாரும் ‘‘இதோ இருக்கிறதே’’ எனக்கூறி வாரண்டை தங்கவேலிடம் காண்பித்துள்ளனர். அதை வாங்கிய தங்கவேலு படிப்பதுபோல் பாவ்லா செய்து, திடீரென தனது வாயில் போட்டு மென்று முழுங்கிவிட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த கர்நாடக போலீசார், அதன்பின்னர் கருமத்தம்பட்டி போலீசை அணுகியுள்ளனர். பின்னர் கருமத்தம்பட்டி போலீசார் தலையிட்டு ‘‘விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவேன்’’ என்ற நிபந்தனைளை தங்கவேலுவிடம் பெற்று பிரச்னைக்கு தீர்வு கண்டனர். கருமத்தம்பட்டியில் நடந்த  இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: