கிராவல் குவாரிகளில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் நியமனம்

சிவகங்கை, மார்ச் 19: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராவல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் கிராவல் வெட்டி எடுப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குவாரிகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஒருவரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராவல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கிராவல் கனிமம் வெட்டியெடுப்பதாக தெரிவித்து அதனை தடுக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தனியார் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கறிஞர் கே.குருநாதனை குவாரிகளில் கள ஆய்வு செய்திட நியமனம் செய்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராவல் குவாரிகளிலும் அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக அளவீடு மேற்கொண்டு குவாரி குத்தகைதாரர்களால் எடுக்கப்பட்ட கனிமத்தின் அளவீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளனர். அதன்படி வழக்கறிஞரால் 17.03.2020முதல் ஒரு வார காலத்திற்கு ஏற்கனவே கனிமம் எடுக்கப்பட்ட குவாரிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: