ஆர்.எஸ்.மங்கலத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 19: ஊராட்சி செயலர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி இயக்குனர் கேசவதாஸ் தலைமை தாங்கினார். ராஜா, செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஊராட்சி செயலர்கள் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு தங்களது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

அதேபோன்று சுபநிகழ்ச்சிகள், திருவிழாக்கள் உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும். உணவு வகைகளில் கீரைகள் காய்கறிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு பொருட்களை பொதுமக்கள் அதிகம் உண்ண வேண்டும். இருமல், தும்மல், காய்ச்சல் ஆகியவை உள்ளவர்களிடம் இருந்து மற்ற நபர்கள் ஒரு மீட்டர் தொலைவில் விலகி இருத்தல் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆலோசனைகளை ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்பட்டது. ஊராட்சியில் உள்ள செயலர்கள் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கும் சென்று, பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அதிகாரிகள் உள்பட அனைத்து ஊராட்சி செயலர்களும் கலந்துகொண்டனர்.

Related Stories: