கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கிருமிநாசினி 10 ஆயிரம் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்க முடிவு

மதுரை, மார்ச் 19: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கிருமி நாசினியை 10 ஆயிரம் லிட்டர் அளவிற்கு தயாரித்து, அதனை ஸ்பிரே பாட்டில்களில் அடைத்து இலவசமாக வழங்க மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மதுரை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இப்பணியில் ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலக வாயில்களில் கைகளுக்கு கிருமிநாசினி ‘ஸ்பிரே’ தயாராக வைக்கப்பட்டு வரும் நபர்களின் கைகளுக்கு தெளிக்கப்படுகிறது.

மேலும் கோயில்கள், பள்ளிவாசல்கள், சர்ச்சுகள், போலீஸ் ஸ்டேஷன்கள், பெரியார், எம்ஜிஆர், ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்கள் வார்டுவாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மக்களின் வீடுகளுக்கும் சென்று கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையிலான கிருமிநாசினியை தயாரித்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கிருமிநாசினியை உடனே தயாரித்திருக்கலாம். இதற்கான உடனடியாக செலவிடும் நிதி வசதி இல்லாததால், பணி தாமதமானது. தற்போது உரிய நிதி வழங்கப்பட்டு விட்டது. முதற்கட்டமாக மாநகராட்சி சார்பில் 10 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி தயாரித்திருக்கிறோம். இதனை ஸ்பிரே தெளிக்கும் பாட்டில்களில் அடைக்கும் பணி நடந்து வருகிறது. மார்ச் 19 (இன்று) முதல் கிருமிநாசினி ஸ்பிரே பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: