கொரோனா பீதியால் நஷ்டம் கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற நடவடிக்கை

நாமக்கல், மார்ச் 19:  கொரோனா பீதியால், வரலாறு காணாத அளவுக்கு நஷ்டத்தை சந்தித்து வரும் கோழிப்பண்ணையாளர்களை காப்பாற்ற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டமன்றத்தில் பாஸ்கர் எம்எல்ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர், சட்டமன்றத்தில் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஒருங்கிணைந்த மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவை 2.25 கோடியில் கட்டப்படும் என மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாட்டு இன பண்ணை அமைக்க ₹1.48 கோடி மற்றும் புதிய தீவன பயிர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள 25 ஏக்கரில் தீவன விதைகள் உற்பத்தி பிரிவு ஏற்படுத்த 1.49 கோடி ஒதுக்கீடு செய்த கால்நடை துறை அமைச்சருக்கு நன்றி.

கடந்த 3 வாரமாக கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பப்பட்டு வருவதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் மற்றும் கறிக்கோழி விலை குறைந்துவிட்டது. இதனால் கோழிபண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல்  பண்ணையாளர்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். வரலாறு காணாத அளவுக்கு கோழிப்பண்ணையாளர்கள் கொரோனா வைரஸ் பீதியால் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் கோழிப்பண்ணைத் தொழில் மற்றும் அதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. எனவே, கோழிப்பண்ணை தொழிலையும், அதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எம்எல்ஏ பாஸ்கர் தெரிவித்தார்.

Related Stories: